இன்று திருச்சியில் பிரமாண்ட மாநாடு.! அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்.?
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது.
அதிமுக-வில் இருந்து தன்னை வெளியேற்றியபின் கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவை வெளிகாட்ட ஓபிஎஸ் தலைமையில் இன்று திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது.
குறிப்பாக, அதிமுக கொடியைப் பயன்படுத்த ஓபிஎஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் மாநாட்டு மேடையையே சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போல வடிவமைத்துள்ளனர்.
மேலும், அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்று பெயரும் வைத்துள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் ஓபிஎஸ் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆதரவை வேண்டி ஓபிஎஸ்:
முன்னதாக, அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள் தான் வழங்கினார்கள். இந்நிலையில், அதிமுக பிரச்சனைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல தான் இன்று திருச்சியில் மாநாடு நடைபெற இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.
சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு:
சமிபத்தில், இன்று நடைபெறவுள்ள திருச்சி மாநாட்டில் சசிகலா, டிடிவி தினகரன், அதிமுக கட்சி தொண்டர்கள் வருகை தர இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் மாநாட்டின் மூலம் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.