மக்களே போங்க…தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்!
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே,தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.அதன்படி,கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிலையில்,தொழிலாளர் தினமான இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள்,பொது நிதி செலவின விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
குறிப்பாக,மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்கள்,கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதாரம்,பள்ளி,அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதனால்,பொதுமக்கள்,மகளிர் சுய உதவி குழுக்கள்,மாற்றுதிறனாளிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.