நோன்பு கஞ்சியை வீட்டிலேயே தயாரித்து கொள்ள தலைமை செயலர் அறிவுரை.!
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் , வழிபாட்டு தளங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அப்போது மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.
இது குறித்து, தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்களுடன் இன்று தலைமை செயலர் சண்முகம், சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஆலோசித்தனர்.
அதில், நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக அரசு அளிக்கும் 5,450 மெட்ரிக் டன் பச்சரிசியை இஸ்லாமிய அமைப்பு மூலம் தமிழகமெங்கும் உரிய குடும்பங்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அரிசி விநியோகிக்கப்படும் எனவும், இந்த விநியோகம் இம்மாதம் 22ஆம் தேதிக்குள் தன்னார்வலர்கள் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.
மேலும், பள்ளிவாசல் சென்று தொழுக வேண்டாம் எனவும், வீட்டிலேயே தொழுக வேண்டும் எனவும், வீடுகளிலேயே நோன்பு கஞ்சி காய்ச்சி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இஸ்லாமிய தலைவர்கள் ஒரு மனதாக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார்.