ஆளுநர் உரையும், அரங்கேற்றப்பட்ட நாடகமும் – அண்ணாமலை பகீர் அறிக்கை!
மக்கள் பணத்தை செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே என அண்ணாமலை அறிக்கை.
திமுக அதனை கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்றும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் உரையும், அரங்கேற்றப்பட்ட நாடகமும் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரை வாசிக்கப்படும் போது, திமுகவின் கூட்டணி கட்சியினர் தமிழகம் என்று சொல்லாட்சியை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்காக ஆளுநரை எதிர்த்து கோஷமிட்டனர்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடனும் ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி மனிதன் தமிழன் தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்தான் தமிழகம் என்ற தலைப்பிலே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகளை நினைவு கூர்ந்து தமிழக அரசை கேட்கிறேன், ஆளுநர் அவர்கள் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டுவிட்டது.
ஆகாத மாமியாரின் கைபட்டால், குற்றம் கால் பட்டால், குற்றம் என்பது போல கவர்னர் அவர்கள் எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும், எதிர்மறையாக பேச வேண்டும் என்பதை கண்மூடித்தனமாக தமிழக அரசு செய்து வருகிறது. திறனற்ற திமுக அரசு தன் குறைகளை எல்லாம் மறைக்க மக்களை திசை திருப்ப இப்படி உணர்வு ரீதியான பிரச்சனையை கிளப்புவது வாடிக்கையே.
ஆர்.என்.ரவி அவர்கள் வாசித்த ஆளுநர் உரை என்பது திமுக அரசால் எழுதி வழங்கப்பட்ட உரையே தவிர கவர்னரின் சொந்த கருத்துக்கள் அதில் இடம்பெறவில்லை. திமுகவினர் கூட்டணிக் கட்சியினரைத் தூண்டிவிட்டு மௌனமாக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கண் துடைப்பு நாடகத்தை தடுக்க வேண்டிய சபாநாயகர் அகமும் முகமும் மலர அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில், ஆளுநர் உரையை படித்த பிறகு முதல்வர் பேசுவது மரபல்ல. ஆனால் ஆளுநர் அவையில் இருக்கும் போதே, ஆளுநர் மாண்புக்கு மரியாதை செலுத்தாமல், ஒலிபெருக்கி வழங்கப்படாத போதும் முதல்வர் பேசுவது தவறான முன்னுதாரணம். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்துகொண்டதால், ஆளுநரே அவையைவிட்டு வெளியேற நேரிட்டது.
தமிழே தெரியாத ஆளுநர் அவர்கள், தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டால், நல்ல தமிழில் பேச முயற்சிக்கும் போது திமுக அரசின் தூண்டுதலால் அதன் கூட்டணிக் கட்சியினர் நடந்து கொண்ட விதமும், அதைத் தடுக்காத ஆளும் கட்சியினரின் விஷமத்தனமான அமைதியும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே என்றுள்ளார்.