நாளை…ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரி ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,தங்கம் தென்னரசு ஆகியோரும் நேரில் சென்று வலியுறுத்தியிருந்தனர்.ஆனால், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
இதனால்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஆளுநரின் கார் மீது கல் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 28 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உட்பட 13 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 27, 2022