ஆளுநர் ரவியை திரும்ப பெற கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை.! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு.!
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். – சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட போவதாக தற்போது அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வருகிறார் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவி உயர்ந்த பொறுப்பு. ஆனால் அவர் ஓர் பாஜக தலைவராகவே செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் கையெழுத்துக்காக கிடப்பில் இருக்கிறது.
பல்கலைகழக நிர்வாகங்களில் அவரே அத்துமீறி தலையீடுகிறார். சனாதானம் தான் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று கூறுகிறார். இந்தியாவும் மதம் சார்ந்த நாடு என இந்திய அரசியலமைப்புக்கு எதிராக பேசுகிறார்.
திருக்குறள் என்பது மதம் சார்ந்தது என கூறுகிறார். அது உலக பொதுமறை என அனைவராலும் போற்றப்படுகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட மதசார்பாற்ற கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு கடிதம் எழுதி குடியரசு தலைவரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
பாஜக அலுவலகம் போல தான் ஆளுநர் மாளிகை செயல்படுறது. ஒன்றிய அமைச்சர்களுடன் மாநில நிர்வாகிகளுடன் பாஜக கூட்டம் அங்கு நடைபெறுகிறது.
இதனையெல்லாம் குறிப்பிட்டு, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29இல் காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் எனவும், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தங்குவார் எனவும் முத்தரசன் அறிவித்துள்ளார்.