ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே.. சிசோடியா கைது.. பாஜக பிம்பம்.! முதல்வரின் ‘நச்’ பதில்கள்..!
ஆளுநர்களுக்கு காதுகள் கிடையாது. வாய் மட்டுமே உண்டு என உங்களில் ஒருவன் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் எனும் நிகழ்வு மூலம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது பதிலை அளித்து வருகிறார். அப்படி இன்று அவர் வழங்கிய பதில்கள் வீடியோ வாயிலாக வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு கேள்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அசராமல் பதில் கூறி வந்தார்.
ஆளுநர்களுக்கு காதுகள் இல்லை :
அதில், ஆளுநர்கள் அரசியலில் தலையிட கூடாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியிருப்பது பற்றி முதல்வர் கருத்து கூறுகையில், பாஜக ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே இருக்கிறது என்றும், அவர்களுக்கு காதுகள் இல்லை எனவும் கடும் விமர்சனத்தை முதல்வர் முன்வைத்தார்.
சிசோடியா கைது :
அடுத்ததாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது பற்றி கேட்கையில், பாஜக அரசு எதிர்கட்சிகளை தேர்தல் மூலமாக மட்டுமே தோற்கடிக்க வேண்டும். அதனை விடுத்தது விசாரணை கமிஷன் என்ற பெயரில் இவ்வாறு செய்ய கூடாது எனவும், மணீஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
பாஜக தேர்தல் வியூகம் :
அடுத்து வடக்கிழக்கு மாநில சட்ட மன்ற தேர்தலில் பாஜகவின் நிலை குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பாஜகவின் தேர்தல் வியூகம் வென்றுள்ளது. திரிபுராவில் , பாஜக எதிர்ப்பு வாக்குகளை திரிபுரா மேக்தா கட்சி பெற்றதால், காங்கிரஸ் – இடது சாரிகள் தோற்றுள்ளன.
நாகலாந்து – மேகாலயா :
அதே போல , நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து பாஜக வென்றுள்ளது. தனியாக நின்று இருந்தால் இந்த வெற்றி கிடைத்து இருக்காது. இரண்டு மாநில தேர்தல் பற்றி பேசுபவர்கள் மேகாலயா பற்றி பேசுவதில்லை. அங்கு 59 இல் பாஜக போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது. அங்கு மாநில கட்சிக்கு ஆதரவு அளித்ததால் அங்கு ஆளும் கட்சி போல பாஜக காட்டிக்கொள்கிறது. இதன் மூலம் போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி எனும் போலி பிம்பத்தை பாஜக வெளிப்படுத்துகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறியுள்ளார்.