ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் – முரசொலி நாளேடு கடும் விமர்சனம்!
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் கால நிர்ணயம் சொல்ல மறுத்தது குறித்து முரசொலி நாளிதழ் விமர்சனம்.
தனக்கு இருக்கும் கடமையை சரியாக செய்யாமல் அவசியமற்ற அரசியல் செய்கிறார் தமிழக ஆளுநர் என்று முரசொலி நாளிதழில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. அவரது நடவடிக்கை அப்படித்தான் இருக்கிறது. ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறாரோ?.
தமிழ்நாடு பாஜகவின் தலைமை பொறுப்பை தானே கவனிக்கலாம் என நினைத்துவிட்டாரா ஆளுநர் என தெரியவில்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவது ஆளுநரின் கடமை. ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பாமல் ஊறுகாய் பானையில் ஊற வைப்பது ஆளுநர் வேலை அல்ல. யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் தமிழ்நாடு ஆளுநர் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆளுநருடன் இணக்கமான உறவையே தமிழக அரசு விரும்புகிறது. ஆனால், ஆளுநரின் போக்கு அதை விரும்புவதாக இல்லை. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். அதைப்புரிந்தும், தெளிந்தும் ஆளுநர் செயல்பட வேண்டும் என அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. முரசொலி நாளிதழின் நிறுவனர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்பதாகும்.