இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைக்கிறார் ஆளுநர் – சு.வெங்கடேசன் எம்பி
ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை என சு.வெங்கடேசன் எம்பி கருத்து.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மதுரை எம்பி, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை தன் முடிவை திரும்ப பெறுகிறார் ஆளுநர். ஒரு அறிவிப்பின் மூலம் அமைச்சரை நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு சு.வெங்கடேசன் எம்பி டிவிட்டர் பதிவில், ஆளுநரை நீக்க இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ, அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள். மேலும், அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர், அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு எனவும் கூறியிருந்தார்.