ஆளுநர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் – எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலேயே குற்றவாளி கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆளுநர் மாளிகை தரப்பில், ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்தும், மயிலாடுதுறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்று கொண்டிருக்கும் போது கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் ஆளுநர் வாகனம் மீது வீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை அவர்கள், ஆளுநரின் குற்றச்சாட்டு பொய்யானது என்று தமிழ்நாட்டின் காவல்துறை நிரூபித்துள்ளது. யாருடைய தூண்டுதலின் பேரில் ஆளுநர் செயல்பட்டு, தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முனைகிறார்.
தமிழ்நாட்டு மக்களின் மீது துளியும் அக்கறையில்லாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டு வைப்பதன் மூலம் மிகவும் மலிவான அரசியல் செய்ய முயற்சிக்கிறார். ஆளுநரின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு, உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.