ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் – டி.ஆர்.பாலு..!
நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பிக்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.ஆர்.பாலு எம்.பி பேசியபோது, நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்து விட்டார்.
அரசியல் காரணத்திற்காக தமிழ்நாடு எம்.பிக்களை அமித்ஷா சந்திக்க மறுப்பதாகவும், அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நீட் மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஆளுநர் அதனை குழித்தோண்டி புதைத்து கொண்டிருக்கிறார். நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக கட்சிகள் அனைத்துமே நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலையை எடுத்துள்ளன. 9 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தும் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பிக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.