கள்ளச்சாராயம் தயாரித்தால் இனி ஆயுள் தண்டனை.! சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்.!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்டத்திற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மதுவிலக்கு திருத்த சட்டம் 1937இன் படி கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை விற்று, அதனால் உயிரிழப்புகள் ஏற்படின், குற்றம் சட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 லட்ச ரூபாய் வரையில் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் கடந்த சில மாதங்களில் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மதுவிலக்கு திருத்த சட்டத்தில் தமிழக அரசால் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி, தமிழக மதுவிலக்கு சட்டத்திருத்தம் 1937இல் திருத்தம் கொண்டுவந்து அதனை சட்டமசோதாவாக நிறைவேற்ற தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த சட்டதிருத்தத்தின் படி, கள்ளச்சாராயம் தயாரித்து அதனை விற்று அதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால், கள்ளச்சாராயம் தயாரித்து விற்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும், அதிகபட்சம் 10 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க, விற்க பயன்படுத்தப்பட்ட அசையும் சொத்துக்கள், வாகனங்கள் என அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் புதிய மதுவிலக்கு திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சட்டதிருத்த தீர்மானமானது கடந்த ஜூன் 29இல் தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கடுத்த நடவடிக்கையாக இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.