ஆளுநர் அடையாள பதவி மட்டுமே.. மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம்..உச்சநீதிமன்றம் தீர்ப்பு.! முதல்வர் வரவேற்பு..
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது.
அப்போது, பஞ்சாப் மாநில தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில், ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்திருப்பதால் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
அதில், அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை எனில், அதனை மறுபரிசீலனை செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இவ்வாறு திருப்பி அனுப்பிய சட்ட மசோதா, மாநில சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்.
ஆளுநர் பதவி என்பது ஒரு அடையாள பதவி மட்டுமே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் தலைவர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசின் பிரதிநிதி. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையின் முடிவுகளின்படி தான் ஆளுநர் என்பவர் செயல்பட வேண்டும். ஜனநாயக நடைமுறைகளில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் இருக்கிறது, ஆளுநருக்கு இல்லை என கூறி ஆளுநருக்கு எதிரான வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தபோல, சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சுழலில் பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் அதிரடியான தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து அடுத்த Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பா.சிதம்பரம்:
பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரமும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். எனவே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும்.
இந்த தீர்ப்பு புரியவில்லை என்றால் மூத்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் பதிவை மேற்கோள்கட்டி தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.