ஆளுநர் என்பது போஸ்ட்மேன் வேலை மட்டும்தான்..! அவருக்கு அதிகாரம் இல்லை..முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

Governorpostman

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை, குடியரசுத் தலைவர் தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெறும் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “ஆளுநருக்கு நாங்கள் அனுப்பிய மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பினார். அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்து, மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கிறோம். அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பொழுது ஜனாதிபதி ஜனாதிபதியிடம் இருக்கிறது .ஆகவே அதை முடிவு செய்ய வேண்டியது யார்.? ஜனாதிபதி தான் இதனை முடிவு செய்ய வேண்டும்.”

“ஒன்றிய அரசின் அறிவுரை ஏற்று, ஆலோசனை பெற்ற பிறகு ஜனாதிபதி தான் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். அந்த அதிகாரம் கவர்னருக்கு கிடையாது. போஸ்ட்மேன் வேலை மட்டும்தான் நாம் அனுப்புவதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதே அவருடைய வேலை. ஆனால், திடீரென்று சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை ஆளுநர் நடத்தி இருக்கிறார்.”

“அந்த உரையாடலில் சேலத்தில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றிக்கொண்டிருக்கிற ஒரு தோழர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய மகனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அப்பொழுது பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கும் பொழுது இவர் வெளிப்படையாக தைரியமாகவும் துணிச்சலுடனும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், என்னுடைய மகன் தேர்வாகி விட்டான். எனக்கு வசதிகள் இருக்கிறது.”

“ஆனால் சில மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிலை என்ன ஆகும். விரைவில் தயவு செய்து நீட்டுக்கு விலக்கு பெறுவதற்கு முயற்சிகள் ஈடுபட வேண்டும் என்று கவர்னர் இடத்தில் கேட்ட பொழுது கோபம் அடைந்த கவர்னர் அதெல்லாம் முடியாது என்று கூறுகிறார். அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது,  ஆனால் அவர் முடியாது என்று கூறுகிறார்.”

“என்னிடம் அதிகம் அதிகாரம் இருந்தால் கூட அதற்கு செய்ய மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதையெல்லாம் கண்டித்தும், நீட்டுக்கு முழு விளக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் திமுகவின் துணை அமைப்புகளாக இருக்கக்கூடிய இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சேர்ந்து தலைமை கழகத்தின் ஒப்புதலோடு தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்”

“எனவே, இந்த அறப்போராட்டம் தொடரும். நீட் நீட்டுக்கு விளக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது உறங்காது என்பது உறுதி. இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக களப்பணியாற்றக்கூடிய இயக்கம். தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளைச் சொல்லி இருக்கிறோமோ அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கூடிய திராவிட மாடல் அரசாக இந்த அரசு வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறது.”

“அப்படி வீர நடை போட்டுக் கொண்டிருக்கிற இந்த திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். எப்படி 2021ல் திமுக ஆட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் ஒரு நல்ல விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, 2024 ல் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கு வாங்கி தந்த விடியலைப் போல இந்தியாவிற்குக் கூட அந்த விடியலை பெற்று தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்