மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை – தலைமை நீதிபதி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதித்து வந்த ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.
தமிழ்நாடு அரசு:
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை நிராகரித்துள்ளார் ஆளுநர் ரவி. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சட்டமன்றத்தில் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும், அதனை நிறுத்திவைக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?. ஏற்கனவே அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திருப்பி அனுப்புவது ஏன் என கேள்வி எழுப்பி சட்டப்பேரவையில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாடு ஆளுநரிடம் 15 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
தமிழக ஆளுநர் ஒவ்வொரு நிபந்தனையும் மீறியிருக்கிறார். மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைப்படி ஒரு ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் மீது withhold என ஆளுநர் கூற முடியாது. உரிய காரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்கிறார் என வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி அமர்வு:
2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்? எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளது. 10ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட நிலையில், 13ம் தேதி மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சட்டப்பேரவையில் தவறான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. மசோதாவை திருப்பி அனுப்பும்போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் திருப்பி அனுப்ப வேண்டும் என சட்டம் கூறுகிறது எனவும் கருத்து தெரிவித்து, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்தது தலைமை நீதிபதி அமர்வு.