ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது… சட்ட ரீதியில் சந்திப்போம்… திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.!
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றுவதற்கும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு நேற்று பரிந்துரை செய்திருந்தார். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றும் இரண்டாவது முறையாக பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளார். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக தொடர முடியாது என கூறி பரிந்துரையை மறுத்துள்ளார்.
மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இதையடுத்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது என சொல்ல அதிகாரம் கிடையாது.
திமுக சட்ட ரீதியில் இதனை சந்திக்கும் என தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி நடந்துகொண்டால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வழக்கறிஞர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்வதாகவும், ஆளுநர் போல் நடந்துகொள்ளாமல் பாஜகவின் மாநில தலைவர் போல் நடந்து கொள்வதாகவும் ஆர்.எஸ்.பாரதி மேலும் கூறினார்.