ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் – உச்சநீதிமன்றம்

Governor RN Ravi - Supreme court

தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது. அப்போது ஆளுநர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

அப்போது ஆளுநர் தரப்பில் இருந்து மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டது என கூறப்பட்ட போது, அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா ? சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞருக்குத் தலைமை நீதிபதி, சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லையே; முதன் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம்.

ஆனால் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி விட்டு, அது மறு நிறைவேற்றம் செய்த பின்னர் அந்த மசோதாவை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் மீண்டும் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதபட்சத்திலும், பண மசோதாவாக இல்லாதபட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.

பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம்.

பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். முட்டுக்கட்டைக்கு ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என தெரிவித்து,  சட்ட மசோதாக்களை ஆளுநர்  கிடப்பில் போட்டதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்