ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

mk stalin rn ravi

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். இந்த விழா தொடங்கியது எதிர்ப்புகளுக்கு மத்தியில் முடிந்தது சர்ச்சையில் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து இருந்தார்கள்.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அதில் ” இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

இப்படியான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது.

இதன் காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதா? எனக் கேள்விகள் எழும்பத் தொடங்கியுள்ளது. இதற்குக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஏற்கனவே, தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கடும் கோபத்துடன் அவர் கூறியதாவது ” ஆளுநரா? ஆரியநரா? என்ற கேள்வி எழுப்பி…திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்.  சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர் எனவும், திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” எனவும் கடும் காட்டத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்