7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்! தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி – ராமதாஸ்

Default Image
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு . சுமார் 40 நாட்களுக்கு மேல் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனைத்தொடர்ந்து நேற்று  (அக்டோபர் 30-ஆம் தேதி ) மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு தமிழக ஆளுனர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களிடையே நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது.
7.50% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுனரின் ஒப்புதல் தாமதமாவதை சுட்டிக்காட்டி, உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் அழுத்தத்திற்கு பிறகே இந்த விஷயத்தில் பிற கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கின. நிறைவாக, கால தாமதம் ஆனாலும் 7.50% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் 7.50% விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.7.50% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்