“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி”..கிண்டி கத்திக்குத்து சம்பவத்திற்கு விஜய் கண்டனம்!

தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என கிண்டி கத்திக்குத்து சம்பவத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

vijay angry

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்ட பகலில், இப்படியான சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கூறி வருகிறார்கள். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என விமர்சித்து தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது ” தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்” என திமுக அரசை விமர்சித்தார்.

அதனை தொடர்ந்து “கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்