நரிக்குறவ தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்த அரசு போக்குவரத்து ஊழியர்கள்..!
சென்னையில் நரிக்குறவ தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்த அரசு போக்குவரத்து ஊழியர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கன்னியாகுமரியில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தை அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தில் இருந்து இறங்கி விட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், சென்னையை சேர்ந்த அரசு போக்குவரத்து பணியாளர்கள் நரிக்குறவர் தம்பதிக்கு பாலூற்றி பாதபூஜை செய்துள்ளனர்.
பாரிமுனை சென்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி பஸ் ஓட்டுனர் அப்துல் மன்னா, நடத்துனர் மோகன் ஆகியோரிடம், ‘பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும்’ எனக் கூற அவர்கள் அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அப்துல் மன்னா, மோகன் ஆகியோருடன், அவர்கள் செல்ல வேண்டிய பஸ்சின் ஓட்டுனர் சதீஷ் பாபு, நடத்துனர் பூமணி ஆகியோர் சேர்ந்து நரிக்குறவர் தம்பதிக்கு காலில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து அழைத்து சென்றனர்.
இதுகுறித்து மாநகர பஸ் ஊழியர்கள் கூறுகையில், சமீபகாலமாக பஸ் நடத்துனர் ஓட்டுனர் குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் உள்ளது. நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். பயணிகளையும் சமமாக நடத்துகிறோம் என்பதை உணர்த்தவே இப்படி செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.