கடல் அரிப்பை உடனடியாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..! – ஈபிஎஸ்

Default Image

நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை உடனடியாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் அறிக்கை. 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை உடனடியாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் ஊருக்குள் வந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. நாகப்பட்டினம் நகரம், நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு சிறு மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பித்து, அதன்படி தற்போது சிறு மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்சூழ்நிலையில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, இந்தப் பகுதியில் கடல் கொந்தளிப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்று இப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் இல்ல அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இல்ல அலுவலகம் எதிரில் உள்ள நம்பியார் நகர் சிறு மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக, கடல் கொந்தளிப்பால் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் சுமார் 100 மீட்டர் நிலப் பகுதியினுள் உட்புகுந்துள்ளது. இதனால் சுமார் 10 வீடுகள். பல மின் கம்பங்கள் சேதமடைந்து விழுந்து விட்டன.

கொந்தளிக்கும் கடலால் இப்பகுதியினுள் மேலும் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று இப்பகுதி மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இதனால் நாகப்பட்டினம் நகருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஆபத்தான  நிலையும் உள்ளது.

ஏற்கெனவே, 1994-95ம் ஆண்டில் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டபோது, அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தற்போதைய வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஓ.எஸ். மணியன் அவர்கள், அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களிடம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுக்கா, பிரதாவராமபுரம் ஊராட்சியில் உள்ள செருதூர் மீனவ கிராமத்தில் கடல் கொந்தளிப்பினால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்துள்ளது என்ற தகவலைச் சொன்னவுடன், மாண்புமிகு அம்மா அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி, கடல் அலைகளின் வேகத்தைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் கடல் மணலில் புதைக்கப்பட்டு அலைகளின் வேகம் பெருமளவில் தடுக்கப்பட்டு, கடல் அரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது.

அதுபோல், இந்த திமுக அரசும் நாகப்பட்டினம் நகரிலேயே இருக்கும் நம்பியார் நகர் மீனவ கிராமம் உட்பட கடல் நீர் உட்புகுந்த அனைத்து இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்