பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து அரசு உத்தரவு..!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிறையில் உள்ள பல கைதிகள் உயிரிழந்த வந்த நிலையில் பல நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு மே 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பலமுறை பரோலை நீட்டித்து வருகிறது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடையும் நிலையில் 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.