ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது – தூத்துக்குடி ஆட்சியர்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது என கூறப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமா? என ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டதற்கு, ஆலையை திறக்கக்கூடாது என்று பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் எதிர்ப்பை தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும் கருத்து கேட்பு கூட்டத்தில் கூறியுள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். காலை 11 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.