#BREAKING: மேகதாது அணை கட்ட அரசு ஒருபோதும் அனுமதிக்காது- அமைச்சர் துரைமுருகன்..!
மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் நேற்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.
இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க எடுத்துக் கொள்வதாக தெரியவந்ததையடுத்து தமிழக அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில் அடுத்தடுத்து நடைபெற்ற ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது அணை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேகதாது பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும், மின் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் வந்து அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தது. அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.