காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை..! தமிழக அரசு எச்சரிக்கை..!
காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்றும் இன்றும் மட்டும் பொது மக்களின் தேவைகளுக்காக அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் அனைத்து காய்கறி கடைகள், மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சில கடைகளில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து தமிழக அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ளது.
மேலும், காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் என்றும், உயர்த்தப்பட்ட காய்கறிகள் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.