தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் -ஓபிஎஸ் ..!

Default Image

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணார்வை கருத்தில் கொண்டு, அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புகள் உருவாவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது, மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்தை நமக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியப் பணியாளர்கள். இவர்களின் பணி மகத்தானது. உயிர்க் கொல்லி நோயான கொரோனாத் தொற்று தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கின்ற, உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்த ஆபத்தான சூழ்நிலையில், ஆங்காங்கே ஏற்படும் மின் தடைகளை சீர்செய்யும்

பணியில் ஈடுபடுவது. தங்கு தடையின்றி மின்சாரத்தை பொதுமக்களுக்கு அளிக்கும் பணியை மேற்கொள்வது, மின் மாற்றிகளை பழுது பார்ப்பது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின் இணைப்பை பழுது பார்ப்பது, மின் இணைப்பிளை வழங்குவது, பொதுமக்களின் இல்லங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் சென்று கணக்கீட்டுப் பணியை மேற்கொள்வது என பல்வேறு பணிகளை இடைவிடாமல் பொதுமக்களுக்காக அல்லும், பகலும் அயராது மேற்கொண்டு வருகின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தங்களது உயிரைதுச்சமென மதித்து அவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா என்கிற கொடிய நோய் தாக்கப்பட்டு இதுவரை 200-க்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது என்றும், கொரோனா நோய்த் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கும் நேர்வில் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படாததால், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எவ்விதச் சலுகையும் கிடைப்பதில்லை என்றும் எடுத்துக்கூறி, தமிழ்நாடு மின்சார வாரியப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அதற்குரிய சலுகைகளைஅவர்களுக்கு வழங்க வேண்டும்.

என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின் வாரியப் பணியாளர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் நிதியுதமி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணார்வை கருத்தில் கொண்டு, அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும், முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கும் கிடைக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்