“மனித நேயத்தின் மறுபதிப்பாக செயல்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு” – வைகோ பாராட்டு..!
மனித நேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர்.
இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும்,
- உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூபாய் 3000 உதவித் தொகையை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.
- ஏற்கனவே தாய் தந்தையை இழந்து தற்போது கொரோனா தொற்று நோயால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தமிழக அரசை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,”மணிமேகலை காப்பியத்தில், கையில் அமுத சுரபியுடன் காணார்,கேளார், பேசார் போன்ற ஆதரவற்றவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல, தமிழக அரசே அமுத சுரபியாக ஆகி விட்டது. மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிரூபித்துள்ளது.
மனித நேயத்தின் மறுபதிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்”,என்று தெரிவித்துள்ளார்.