அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, ஜனவரி 1 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ந-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும் 2016-ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பால் அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 முதல் ரூ 12 ஆயிரம் வரை ஊதியத்தில் உயர்வு ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அகவிலைப்படி உயர்வுக்கு தமிழக தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், தற்போது மிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.