கீழடி அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு -தமிழக அரசு அரசாணை
கீழடியில் அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும், 4 மற்றும் 5 அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர்.பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதற்கு இடையில் கீழடியில் 5 கட்டங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு சமீபத்தில் நடந்த பட்ஜெட்டில் ரூ.12.21 கோடி நிதியை ஒதுக்கியது.இந்நிலையில் கீழடியில் அருங்காட்சியகத்திற்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.