“தமிழக அரசே…இவரை சட்டத்திற்கு முன் நிறுத்தி,தண்டனை பெற்று தருக”- ஓபிஎஸ் வலியுறுத்தல்!
மதுரை கீழவெளிப் பகுதியில் இடிந்து விழுந்த 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டட விபத்திற்குக் காரணமான கட்டட உரிமையாளரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,கட்டட விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றை தரைமட்டமாக இடிப்பதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும்,மதுரை கீழவெளிப் பகுதியில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டட விபத்திற்குக் காரணமான கட்டட உரிமையாளரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“மதுரை மாநகருக்குட்பட்ட கீழவெளிப் பகுதியில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் இரவுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை, விளக்குத்தூண் காவல் நிலையத் தலைமைக் காவலர் திரு. சரவணன் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,மற்றொரு தலைமைக் காவலரான திரு. கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் அறிந்து ஆற்றொணாத் துயரமும்,மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த தலைமைக் காவலருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், துணிவையும் எல்லாம்வல்ல இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேற்படி விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து,கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தலைமைக் காவலர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிராத்திக்கிறேன்.
உயிரிழந்த தலைமைக் காவலர் திரு. சரவணன் குடும்பத்திற்கு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த தலைமைக் காவலர் 25 திரு. கண்ணனுக்கு 5 இலட்சம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டு இருப்பதாக அரசின் செய்தி வெளியீடு தெரிவிக்கிறது. இருப்பினும், பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.எனவே, இழப்பீட்டினை உயர்த்தித் தர மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமைக் காவலரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம், தமிழ்நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றை தரைமட்டமாக இடிப்பதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த விபத்திற்குக் காரணமான கட்டட உரிமையாளரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மதுரை – கீழவெளிப் பகுதியில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் விளக்குத்தூண் காவல் நிலைய தலைமை காவலர் திரு.சரவணன் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து, மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/oM7ZE5J0gR
— O Panneerselvam (@OfficeOfOPS) December 23, 2021