‘அரசுக்கு இதயம் வேண்டும்’ – மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி ட்வீட்..!
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரித்துள்ளது அரசாங்கத்தின் செயல் இரக்கமற்றது என்று சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் 21.03.2022 அன்று பதில் அளித்துள்ளார். 2020 – 21 ல் ரயில்வே பயணக் கட்டணம், 2019 – 20 ஐ ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது என்று கூறி, எல்லா பிரிவினருக்கும் சலுகை கட்டணம் வழங்குவது சாத்தியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
கோவிட் காலத்தில் நிறைய நாட்கள் ரயில்கள் ஓடவில்லை. ஆகவே வருவாய் குறைந்தது எல்லோரும் அறிந்ததே. அது போல பல குடும்பங்களும் வருவாயை, வேலைகளை இழந்தன. கோவிட் கால நிவாரணமாக மாதம் ரூ 7500 தாருங்கள் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. மூத்த குடிமக்களின் உளவியல் பாடுகள் சொல்லி மாளாது. தாங்கள் சுமையாக கருதப்படக் கூடாது என்ற அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானது.
அரசாங்கத்திற்கு இதயம் வேண்டும். இது போன்ற கட்டண சலுகைகள் அவர்களுக்கு சமூகம் ஆற்றுகிற நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட. இன்னும் அவர்கள் தாங்கள் நுகரக் கூடிய ஒவ்வொரு பண்டம், சேவை மீதும் வரி செலுத்துகிறார்கள். வருமான வரி செலுத்துபவர்களும் உண்டு. கடந்த 6 மாதங்களாக முன்பைப் போல ரயில்கள் ஓட ஆரம்பித்தும் விட்டன.
அவர்கள் கை விரலைப் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது.
அமைச்சரே உங்கள் பதில் குருரமானது. மறு பரிசீலனை செய்யுங்கள். மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வாருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
அரசுக்கு இதயம் வேண்டும்.
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு.
கட்டண சலுகை என்பது சமூகத்தின் நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட.
அவர்கள் விரல்பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது. அதை மறந்து அவர்கள் மீது அரசே உளவியல் தாக்குதலை நடத்துவது குரூரமானது. pic.twitter.com/IZyt6BxoAG
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 4, 2022