அரசு இயந்திரமா..? செய்தி தொடர்பு நிறுவனமா..? – அண்ணாமலை

Annamalai

கட்சி நிகழ்ச்சிகளுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், அரசு ஊழியர்களை, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதையும், அரசு எந்திரத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், பொதுவாக, தமிழக அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட அரசு சார்ந்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வழியாக வெளியாகும். இதற்கான அறிவிப்புகளில், அறிவிப்பு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு தொடர்பான அறிவிப்புகளை மட்டுமே, செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக வெளியிடுவது ஒவ்வொரு மாநில அரசும் பின்பற்றும் நடைமுறை.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அரசு இயந்திரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்வது, செய்தி மக்கள் தொடர்புத் துறையிலும் தொடர்கிறது. திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாக வெளியாகின்றன.

கட்சி அறிவிப்புகளுக்கும் ,தமிழக அரசு அறிவிப்புகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு முறைகேடான ஆட்சியை கொண்டிருக்கிறது திமுக. நடத்திக்
அதுமட்டுமில்லாது, திமுக நிகழ்ச்சிகளை, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை காட்சிப் படுத்த வேண்டும் என்றும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊழியர்கள், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் தெரிய வருகிறது.

உதாரணமாக, கடந்த 14.10.2023 அன்று, மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில், இந்தியா முழுவதும் உள்ள வாரிசு அரசியல்வாதிகளை வைத்து திமுக நடத்திய நாடக நிகழ்ச்சியில், தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊழியர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதால், அவர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்தேன்.

திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் இன்னும் ஒரு படி மேலாக, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து, திமுகவின் கட்சி நிகழ்ச்சிகளின் காணொளிகள் நேரலை செய்யப்படுவதாகவும் அறிகிறேன். அரசு இயந்திரத்தையே முழுக்க முழுக்க தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக.

கடந்த 01.04.2023 தேதியிட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செய்திக் குறிப்பு எண் 635, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நடத்திய,சமூக நீதி மாநாடு என்ற நாடு தழுவிய நாடகத்தைப் பற்றிய அறிவிப்பு, அரசு அறிவிப்பாக வெளிவந்திருக்கிறது.

கடந்த 23.06.2023 தேதியிட்ட செய்திக் குறிப்பு எண் 034, பாராளுமன்றத் தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசியது, அரசு அறிவிப்பாக வந்திருக்கிறது. கடந்த 14.10.2023 தேதியிட்ட செய்திக் குறிப்பு எண் 049, திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசியது வெளியாகியிருக்கிறது.

இவை அனைத்துக்கும் உச்சமாக, தமிழக விளையாட்டு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சர்ச்சையாகப் பேசி, நாடு முழுவதும் அவருக்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு மட்டுமல்லாமல், தேசிய அளவில் திமுகவின் வேறு எந்தக் கூட்டணிக் கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவுக்கு வராத நிலையில், வேறு வழியின்றி, தனது வாரிசை சிக்கலில் இருந்து காக்கவும், பிரச்சினையை திசைதிருப்பவும், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் செய்திக் குறிப்பு எண் 046 என்று எண் இட்டு, நான்கு பக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சனாதன தர்மத்தை ஒழிப்பது என்பது தமிழக அரசின் அதிகாரப் பூர்வ நிலைப்பாடா என்பதை முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். கட்சி
நிகழ்ச்சிகளுக்கும், அரசு நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், அரசு ஊழியர்களை, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதையும், அரசு எந்திரத்தை கட்சி நிகழ்ச்சிகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்