இறந்த தொழிலாளர்கள் உடலை கொண்டு செல்ல அரசு நிதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
பணியிடத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் உடலை கொண்டு செல்ல நிதி வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் இறக்க நேரிட்டாலும் ரயில், விமான மூலம் உடலை எடுத்து செல்வதற்கான செலவுகளை அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தமிழக சட்டமன்றத்தில் 2023-24-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையில், புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணி இடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடும், செலவீனமும் வழங்கப்படும். மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தால், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான ரயில் செலவு அல்லது விமானம் மூலம் எடுத்துச் சென்றால் அதிகபட்சமாக ஒரு லட்சம் வழங்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.