ஆளுநர் தவிர்க்க முடியாத சக்தியா?

Default Image

ஆட்டுக்கு தாடி போல, தேவையில்லாதவர்கள் ஆளுநர்கள் என்றார் அண்ணா. ஆளுநர் தேவையில்லை என்பது திராவிடக் கட்சிகளின் கோரிக்கையாக இருந்தாலும் இரு திராவிடக் கட்சிகளுமே தங்களுக்கு தேவையானபோது ஆளுநரைப் பயன்படுத்திக்கொள்ள தவறியதில்லை.

ஆட்சிக் கலைப்பு என்ற அஸ்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. தனக்கு மாநில அரசு இணக்கமாகவும், அடக்கமாகவும் இல்லையென்றால் அவர்கள் எடுக்கும் அஸ்திரம் ஆளுநர் ஆட்சி என்பதே. 25-06-1975 அன்று பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். திமுக இதை கடுமையாக எதிர்த்தது. விளைவு மத்திய அரசுக்கும் திமுக அரசுக்கும் மோதல். திமுக அரசு எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்ற பேச்சு வரத் தொடங்கியது. அதற்கேற்றாற்போல, மாநிலங்களவையில் ஒரு விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய பிரதமர் இந்திரா, ‘‘ஸ்தாபன காங்கிரஸ் ஆளும் குஜராத், திமுக ஆளும் தமிழகம் ஆகிய இரண்டும் இந்தியாவில் கட்டுப்பாடற்ற இரு தீவுகளாக இருக்கின்றன’’ என்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் பருவா, ‘‘பிரதமர் இந்திராகாந்தி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்துவிட்டார். திமுகவுக்கும் இதே கதி ஏற்படலாம்’’ என்று எச்சரித்தார்.

தமிழகத்தில் அப்போது ஆளுநராக இருந்தவர் கே.கே.ஷா அவரும் இப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்போல ‘தமிழ் படிக்கிறேன்’ என்று கிளம்பியவர்தான். ஆனால், காலப்போக்கில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராகிவிட்டார். ‘கே.கே.ஷா என்றால் கலைஞர் கருணாநிதி ஷா’ என்று விமர்சிக்கும் அளவுக்கு நெருக்கம்.

1976 ஜனவரி 30. காந்தி நினைவு தினம். அன்று மாலை காந்தி மண்டபத்தில் காந்தி நினைவுநாள் கூட்டம். அதில் முதல்வர் கருணாநிதி, ஆளுநர் கே.கே.ஷா இருவரும் கலந்துகொண்டனர். “காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி திமுக ஆட்சி செய்கிறது” என்று அதில் கருணாநிதியைப் பாராட்டினார் ஆளுநர் கே.கே.ஷா.

நிகழ்ச்சி முடிந்தது. திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய சிபாரிசு செய்து அறிக்கை அனுப்பினார் கே.கே.ஷா. அதாவது, அப்படி ஒரு அறிக்கை அனுப்ப அவர் பணிக்கப்பட்டார். மறுநாள் மத்திய அமைச்சரவை கூடி திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது. ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவு நிலையை எடுத்தார் எம்ஜி.ஆர். திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட எம்ஜிஆரும் ஒரு காரணம்.

ஷாவுக்குப் பிறகு தமிழக ஆளுநராக மோகன்லால் சுகாதியா பொறுப்பேற்றார். இவர் ராஜ்பவனை காங்கிரஸ் அலுவலகமாகவே மாற்றியவர். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய திமுக பிரமுகர்களின் பட்டியலை அன்றைய தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் அவரிடம் தருவார்கள். ராஜ்பவன் அலுவலகம் அதை மாவட்ட வாரியாகப் பிரித்து, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, கைது நடவடிக்கைக்கு உத்தரவிடும்.

மத்தியில் இந்திரா ஆட்சி போய், ஜனதா ஆட்சி வந்தது. அந்த ஜனதா ஆட்சி போய் மீண்டும் 1980 ஜனவரி 14-ல் இந்திரா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியானது திமுக. தமிழகத்தில் அப்போது எம்ஜிஆர் ஆட்சி.

நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 8 மாநிலங்களில் ஆட்சி செய்த ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவர இந்திராகாந்தி முடிவு செய்தார். அப்போது, கூட்டணிக் கட்சியான திமுக தலைவர் கருணாநிதி டெல்லியில் முகாமிட்டு, எம்ஜிஆர் அரசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார். ‘நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால், ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்பது அவர் வாதம். எட்டை ஒன்பதாக்கினார் இந்திரா. ஆளு நர் பிரபுதாஸ் பட்வாரியிடம் அவசர அவசரமாக அறிக்கை பெறப்பட்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது.

 

இந்த டிஸ்மிஸுக்கும் ஒரு காரணம் உண்டு. நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆளும் 9 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தது. அதற்குதான் இந்திரா கொடுத்த பதிலடிதான் இது.

பிறகு, 9 மாநிலங்களில் நடந்த தேர்தலில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டது. ஆனால் திமுகவால், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியவில்லை. எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்றார்.

சர்ச்சைக்கு இடம்தராமல், மத்திய அரசு மற்றும் மாநில ஆளுநருடன் எப்போதும் சுமுக உறவே வைத்திருப்பார் எம்ஜிஆர். அவரையும் ஒரு ஆளுநர் படாதபாடு படுத்தினார்.

ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபடி அதிமுகவுக்கு 3-வது முறையாக வெற்றியை தேடித் தந்தார் எம்ஜிஆர். ஆனால், அவர் முதல்வராவதற்கு அன்றைய ஆளுநர் குரானா அவ்வளவு சுலபத்தில் அனுமதி தந்துவிடவில்லை. எம்ஜிஆர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக்கொண்டு நாவலர், ஆர்எம்.வீரப்பன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் குரானாவை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கேட்டனர். அதற்கு ஆளுநர், ‘‘அதெல்லாம் இருக்கட்டும்.. எம்ஜிஆர் எப்போது வருவார் அதைச் சொல்லுங்கள். அவருக்கு இன்னும் பேச்சு வரவில்லை என்கிறார்களே..’’ என்றெல்லாம் கேட்டார். எம்ஜிஆர் பதவி ஏற்க ஒரு மாதம் அவகாசம் கேட்டபோது, ‘அவ்வளவு அவகாசம் தரமுடியாது’ என்றார். எம்ஜிஆர் வரும்வரை இடைக்கால முதல்வராக யாரையாவது தேர்ந்தெடுங்கள் என்று யோசனை சொன்னார். அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் ஆர்எம்வி.

ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தும் விதமாக நாவலர், பண்ருட்டி, கேஏகே, ஆர்எம்வி ஆகிய நால்வரும் குடியரசு துணைத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை சந்தித்தனர். பிரதமர் ராஜீவ்காந்தியையும் சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க அவகாசம் தர முடியாது என்று ஆளுநர் சட்ட நிபுணர்களிடம் கருத்து வாங்கி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதை அவர்களிடம் காண்பித்தார் ராஜீவ். இருந்தாலும், இது விஷயத்தில் காத்திருக்கச் சொல்லி குரானாவுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியது. அப்போதும் திருப்தி அடையாத குரானா, ‘எம்ஜிஆருக்கு சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் தகுதிச் சான்றிதழ் வாங்கிக் கொடுங்கள்’ என்றார். அது வழக்கம் இல்லை என்று மருத்துவமனை மறுத்துவிட்டது. உடனே ஆர்எம்வி, மருத்துவமனையில் எம்ஜிஆர் பூரண நலத்துடன் இருக்கும் வீடியோ டேப்பை ஆளுநரிடம் தந்தார். அப்போதும் குரானா விடவில்லை. ‘‘பேச முடியாத, செயல்பட முடியாத ஒருவரை எப்படி முதல்வராக நியமிக்க முடியும்?’’ என்றார். இதற்கு மேலும் அவருக்கு பதில் அளிக்க விரும்பாத ஆர்எம்வி, ‘‘நீங்கள் என்னை நம்பவில்லை. வதந்திகளை நம்புகிறீர்கள். பிப்ரவரி 4-ம் தேதி எம்ஜிஆர் சென்னை திரும்புகிறார். அப்போது உண்மை தெரியும்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

பிப்ரவரி 4. எம்ஜிஆர் சென்னைக்கு வந்தார். ஆளுநர் குரானா, ராமாபுரம் தோட்டத்துக்கே சென்று, எம்ஜிஆருடன் பேசினார். வெளியே வந்த ஆளுநர், ‘‘He is alright. Mentallay and physically he is alright’’ என்றார். பின்னர், எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்றார்.

 

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 1989 ஜனவரியில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. திமுக 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால், 2 ஆண்டுகளுக்கு பிறகு 30-01-1991 அன்று திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

தேசிய முன்னணி அமைச்சரவை வி.பி.சிங் தலைமையில் ஆட்சி செய்தது. தேசிய முன்னணி கூட்டணியில் திமுகவும் ஒரு அங்கம். வி.பி.சிங். ஆட்சி ஓராண்டு காலமே நீடித்தது. சந்திரசேகர் 54 எம்.பி.க்களுடன் தேசிய முன்னணியில் இருந்து விலகினார். இதனால், வி.பி.சிங் ஆட்சி கலைந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார்.

இதை காரணமாக வைத்து, திமுக ஆட்சியைக் கலைக்க ராஜீவ்காந்தியை நிர்ப்பந்தம் செய்தார் ஜெயலலிதா. சந்திரசேகரை ராஜீவ்காந்தி வற்புறுத்தினார். ஆட்சியைக் கலைக்க சொல்லப்பட்ட காரணம்.. ‘விடுதலைப் புலிகளை ஒடுக்க தவறிவிட்டார் கருணாநிதி’ என்பதுதான்.

அப்போது, கருணாநிதியின் நெருங்கிய நண்பரான சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக ஆளுநர். ஆட்சியை கலைக்க சிபாரிசு செய்து அறிக்கை அனுப்பச் சொல்லி, சந்திரசேகர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சுபோத்கான் சகாய், பர்னாலாவை வற்புறுத்தினார். பர்னாலா மறுத்துவிட்டார். ஆனாலும் சந்திரசேகர் அமைச்சரவை கூடி திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, சந்திரசேகர் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார் ராஜீவ்.

‘ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என்பவர்கள்தான், ஆளுங்கட்சி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆளுநரிடம் மனுவும் கொடுக்கிறார்கள். ஆட்சி அமைக்கவும் அவரிடம்தான் அனுமதி கேட்கின்றனர். அவர்தான் ஆட்சி அமைக்க அழைக்கிறார். பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். அமைச்சர்கள் கல்தா, இலாகா மாற்றம் ஆகிய மாற்றங்களும் ஆளுநர் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. துணைவேந்தர் நியமனம், பேரவையைக் கூட்டுவது, முடித்துவைப்பது, சட்டங்களுக்கு ஒப்பதல் தருவது, முக்கிய டெண்டர்கள் வெளியீடு என பல அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கின்றன. உண்மையிலேயே, இவை நிஜ அதிகாரங்களா, தோற்றமா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், திராவிடக் கட்சிகள் ஆளுநரை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டது உண்மை. ‘என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்’ என்று சட்டப்பேரவையில் சென்னாரெட்டி மீது ஜெயலலிதா சொன்ன புகார், பேரவை பதிவேடுகளில் இருக்கிறது. அரசியல் சட்டத்துக்கே சவால் விடும்படி, ஜெயலலிதாவை அவசர அவசரமாக பதவி ஏற்க அழைத்த முன்னாள் நீதிபதி அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி இன்னொரு உதாரணம்.

தெரிந்தோ, தெரியாமலோ மாநில அரசியலில் ஆளுநர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. இதை தெரிந்தும் தெரியாததுபோல திராவிடக் கட்சிகள் நடித்துக்கொண்டே இருப்பது அருமையிலும் அருமை!

source:   dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்