‘லட்டு’வில் சிக்கிய கோபி – சுதாகர்.! பகிரங்க மன்னிப்பு கேட்ட பரிதாபங்கள்.!
பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த லட்டு வீடியோ நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என சேனல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனையடுத்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது.
இந்த விவகாரம் பெரிதாகச் சர்ச்சையாக வெடித்த நிலையில், சினிமா பிரபலங்கள் சிலர் நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக, மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கார்த்தி “எனக்கு லட்டு வேண்டாம். லட்டு குறித்து இப்போது பேசக் கூடாது. அது இப்போது சென்சிட்டிவ் விவகாரம். லட்டு வேண்டாம். ” எனப் பேசியிருந்தார்.
read more- லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!
அவர் நகைச்சுவையாகக் கூறினாலும், ஆந்திரா துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் இந்த விஷயத்தில் மிகவும் கோபப்பட்டு இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துப் பேசாதீர்கள் என எச்சரித்திருந்தார்.
கார்த்தி நகைச்சுவையாகப் பேசியதற்கே பவன் கல்யாண் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கொந்தளித்து வரும் சூழலில், சினிமா பிரபலங்களை தொடர்ந்து சமூக கருத்துக்களை நகைச்சுவையாக வீடியோ மூலம் பிரதிபலிக்கும் யூட்யூப் சேனலான பரிதாபங்கள் இந்த லட்டு விவகாரம் தொடர்பாக நேற்று நகைச்சுவையான ஒரு வீடியோ பதிவைப் பதிவிட்டனர்.
எந்த விஷயங்கள் ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதனை ட்ரோல் செய்து தங்களுடைய பாணியில் மக்களுக்கு நகைச்சுவை கொடுக்க பரிதாபங்கள் சேனல் வீடியோக்கள் வெளியீட்டு வருகிறது. ஆனால், இந்த முறை லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் கோபி மற்றும் சுதாகர் பின் வரும் சர்ச்சைகளை அறியாமல் ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டது அவர்களுக்கு எதிராக வீடியோவை நீக்கக் கூறி, அவர்களைத் திட்டும் அளவுக்குக் கண்டனங்கள் எழுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், தங்களுக்கு எதிராக எழுந்த கண்டனங்களைப் பார்த்துவிட்டு வீடியோவை நீக்கவும் செய்து, வருத்தம் தெரிவித்து விளக்கமும் கொடுத்துள்ளனர்.
பரிதாபங்கள் சேனல் தரப்பில் இருந்து வந்த அறிக்கையில் ” கடைசியாகப் பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால்.. அதற்கு வருத்தம் தெரிவித்துச் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம்.. இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” ஏன கூறியுள்ளனர்.
— Parithabangal (@Parithabangal_) September 24, 2024