குட்நியூஸ்…தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை… தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!
தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழ்நாடு அரசுப் பணி நியமனங்களில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் இயற்றப்பட்டது. நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களில், நூற்றுக்கு இருபது விழுக்காடு பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.
அதன் பின்னர், குறிப்பிட்ட பதவிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில், நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைவர்கள் என்ற வகையில், பார்வை நான்கில் காணும் திருத்தச் சட்டத்தின் மூலமாக உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அச்சட்டத்திருத்தத்தில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:
- வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியானது 10-ஆம் வகுப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
- வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது மேல்நிலை வகுப்பாக (12ஆம் வகுப்பு) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பினை தமிழ் வழிக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
- வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டயப் படிப்பாக (Diploma) இருப்பின், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும். அல்லது, மேல்நிலை வகுப்பிற்குப் பின் பட்டயப் படிப்பினை முடித்திருந்தால், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
- வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
- வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியானது முதுகலைப் பட்டப் படிப்பாக இருப்பின், 10-ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பினை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், மேற்படி சட்டங்களை செயல்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் (W.P(MD),N0.8025 / 2020), 22.03.2021 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு,தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவை சட்டப்படி செல்லத்தக்கவை என மாண்பமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணைகளையும் பிறப்பித்துள்ளது.அதன்படி,
- ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் (10 12-ஆம் வகுப்புகள், பட்டயம், இளங்கலை / முதுகலைப் பட்டங்கள்) முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே,2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.
- ஆனால்,முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10-ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
- அதேபோல,இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of Instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
- கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட தெரிவு முகமைகள் / நியமன அலுவலர்கள் (Recruiting Agencies / Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத் தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள்/நியமன அலுவலர்கள் (Recruiting Agencies / Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை, இணைப்புகள் 1 மற்றும் II-ல் உள்ள படிவங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
- பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / உரிய அலுவலரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- தொடக்க நிலை (5ஆம் வகுப்பு), உயர்நிலை (10-ஆம் வகுப்பு). மேல்நிலை வகுப்பு (12ஆம் வகுப்பு), பட்டயம் (Diploma), இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் ஆகிய கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) மாணவர்களின் பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம் / இதர மொழிகள்) கட்டாயம் குறிப்பிடப்படும். தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளால் வெளியிடப்படும்.
- தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களில், மாணவர்களின் பெயர், பயின்ற பள்ளி / கல்லூரி / கல்வி நிறுவனங்களின் பெயர், முகவரி, வகுப்புகள், சான்றிதழ் வழங்கிய அதிகாரி ஆகிய விவரங்கள் அடங்கிய விரைவு தகவல் குறியீட்டினை (QR code) இடம்பெறச் செய்வதுடன், அச்சான்றிதழை இசேவை மையங்கள் மூலம் வழங்குவதற்கு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் உரிய ஆணைகளை வெளியிடும்.
- தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் மற்றும் தமிழ் பாடத்திலும், மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் (Cross Major Subject Degrees in Tamil) பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.
- மேற்படி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடானது, நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தெரிவு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதர நிலைகள்) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. pic.twitter.com/rcyCseOo6w
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 2, 2021