ஆசிரியர்களுக்கு இன்ப செய்தி..! பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்தினால் சுற்றுலா..!
பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா.
அதிலும் குறிப்பாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில், கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் விரும்பும் எந்த ஓபன் ஆன்லைன் கோர்ஸ்-ஐப் (Massive Open Online Course-MOOC) பெறுவதற்கும் உதவித் தொகை வழங்க ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் திருக்குறளுடன் அதற்கான விளக்கத்தையும் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும் திறனை மேம்படுத்த இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.