விளையாட்டு வீரர்களுக்கு நற்செய்தி..அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியம்..! அமைச்சர் உதயநிதி அசத்தல் அறிவிப்பு..!
தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசி வருகிறார். அதில் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனக் கூறினார்.
மினி ஸ்டேடியம் :
அதன்படி, சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே மினி ஸ்டேடியம் உள்ள 61 தொகுதிகள் தவிர மற்ற 173 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக ரூ.6 கோடி செலவில், 6 மாவட்டங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
ஸ்குவாஷ் உலகக்கோப்பை :
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு போட்டிகளுக்கான அகாடமி மற்றும் கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஹாக்கி முதன்மை நிலை விளையாட்டு மையம் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்படும் எனவும் சென்னை ஸ்குவாஷ் உலகக்கோப்பை நடத்த ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.