“கவலை வேண்டாம்., நல்ல கூட்டணி காத்திருக்கிறது.!” அதிமுக முன்னாள் அமைச்சர் டிவிஸ்ட்.!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே கூட்டணி, தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்து விட்டன.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஜயின் தவெக மாநாடு முடிந்த பிறகு விஜய் பேசிய கூட்டணி பற்றிய கருத்துக்கள், அந்த மாநாட்டிற்கு வந்த தவெக தொண்டர்கள் கூட்டம் ஆகியவை மற்ற பிரதான கட்சிகளை சற்று உற்றுநோக்க வைத்துள்ளன. அதிலும் விஜய் பேசுகையில், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தார். ஆனால் அதிமுக பற்றி விமர்சனம் செய்யவில்லை. அதேபோல அதிமுகவினரும் விஜயை தற்போது வரை விமர்சனம் செய்யவில்லை விமர்சனம் செய்ய வேண்டாம் என தலைமை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் , வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் தவெக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. இந்த பேச்சுக்களை மேலும் வலுப்படுத்தும் விதமாக நேற்று கரூரில் நடைபெற்ற அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ” நாடாளுமன்ற தேர்தலை பற்றி கவலைப்படாதீர்கள். சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மேலாக நல்ல கூட்டணி அமைய உள்ளது. நீங்க கழகப் பணியை ஆற்றுங்கள். நான் கூட்டணியை பார்த்துக் கொள்கிறேன். மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் அமைப்போம் என்று எடப்பாடியார் எங்களிடம் கூறினார்.
நாடளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நமது கழகத்தினர் மத்தியிலேயே சந்தேகம் வந்துவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்று? திமுக 40-க்கும் 40 ஜெயித்து விட்டார்கள், இனி எப்படி ஆட்சிக்கு வருவது என்று கிண்டலும், கேலியும் பேசுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் என்பது நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல். அங்கு போட்டி மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே இருந்தது.
இப்படி இருந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் மட்டும் கூட்டணி வைத்து அதிமுக ஒரு சதவீத வாக்கை அதிகமாக பெற்றுள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே இருந்தும், மூன்றாண்டு காலம் ஆட்சியை கூறியும் 6 சதவீத வாக்கு சரிந்துள்ளது.
ஆனால், சட்டமன்றத் தேர்தல் வேறு. இங்கு தமிழ்நாட்டில் யார் ஆள வேண்டும் என்பது தான் தேர்தல். அதனை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனால் நமக்குள் எழும் பிரச்சனையை நாம் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு வேட்பாளர் யார் நின்றாலும் சரி, இரட்டை இலைக்காக, அதிமுகவுக்காக உழைத்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.” என்று அதிமுக கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.
கட்சியினர் மத்தியில் நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மேலாக நல்ல கூட்டணி அமையும் என்று எடப்பாடி பேசியுள்ளது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில், அதிமுக – தவெக கூட்டணி அமையுமா? திமுக கூட்டணி கட்சிகள் சில அதிமுக பக்கம் வருமா? அதிமுக – பாமக கூட்டணி அமையுமா என்ற பல்வேறு யூகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.