கோகுல்ராஜ் வழக்கு; ஐகோர்ட் கிளையில் இரண்டாவது முறையாக சுவாதி ஆஜர்!
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது, நீதிபதிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சுவாதி நான் இல்லை, எனக்கு தெரியாது என ஒரே பதிலே சொல்லியிருந்தார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டதற்கு சுவாதி கண்கலங்கியுள்ளார்.
நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? என சுவாதிக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். வாக்குமூலம் பொய் என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது, உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்து, சுவாதியை மீண்டும் வரும் இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இது கடைசி வாய்ப்பு என்றும் இன்று ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்று சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.