கோகுல்ராஜ் கொலை வழக்கு! இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்!
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2015-ஆம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்தும் கோகுல்ராஜின் தாயார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
எனவே, தண்டனை எதிர்த்து தாக்கல் செய்த 10 பேரின் மனுவும், அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் மேல்முறையீடு வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.