கோகுல்ராஜ் படுகொலை வழக்கு! ஐவருக்கு எதிராக மேல்முறையீடு – திருமாவளவன் பரபரப்பு அறிக்கை!

Default Image

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டது. இதில் இருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 15 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தது.

கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து, 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, இவ்வழக்கில் சிறையில் இருந்த செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தீர்ப்பு வழங்கி கொடுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், மறைந்த விஷ்ணு பிரியா உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தண்டனையின்றி விடுவிக்கப்பட்ட ஐவருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தண்டனைகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாகவுள்ளது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அதேவேளையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக மிகச் சிறப்பான முறையில் வாதாடி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களைப் பாராட்டுகிறோம். வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு உரிய ஊதியமும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சாதி சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கொலைக் குற்றத்துக்கு முன் விரோதமோ, பகைமையோ காரணம் அல்ல, இந்த எதிரிகள் யாவரும் ஒரு சாதி அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததனால்தான் அவர்கள் இந்த கொலையைச் செய்து இருக்கிறார்கள் என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறி உள்ளது. அந்த சாதி சங்கத்தின் நிறுவனர் ஒரு பயங்கரவாதப் படுகொலையைச் செய்து சாகும்வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கவுள்ளார்.

இந்நிலையில் அந்த சாதி சங்கத்தில் மேலும் பலர் சேர்ந்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு முதல் குற்றவாளி நிறுவிய சாதி சங்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்