கோகுல் ராஜ் கொலை வழக்கு – சுவாதியை மீண்டும் புதன்கிழமை ஆஜர்படுத்த உத்தரவு!
புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை.
கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. நீதிமன்றம் உத்தரவையடுத்து, இன்று விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.
கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையில், சாட்சியம் அளித்த சுவாதியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது, அனைத்து கேள்விகளுக்கு நான் அவள் இல்லை என சுவாதி ஒரே பதில் சொல்லியதாக கூறப்பட்டது. அதாவது, கோகுல்ராஜ் கடத்தப்பட்டது தொடர்பாக சிலருடன் பேசிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது. ஆடியோவில் பேசியது யார் என்று சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நான் யாரிடமும் இப்படி பேசவில்லை என்று நீதிபதிகளிடம் சுவாதி தெரிவித்தார். இதுபோன்று, புகைப்படத்தை காண்பித்து இது யாரென கேட்டதற்கு நான் இல்லை என கூறியுள்ளார். மீண்டும் சுவாதியிடம் கேட்டபோது இது நான் தான் என ஒப்புக்கொண்டார். இதன்பிறகு சுவாதியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்துக்கும் நான் இல்லை, எனக்கு தெரியாது என்று பதில் தான் சொல்லியுள்ளார்.
எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் என்று சுவாதி, நீதிபதிகளிடம் கூறினார். யாருக்கு பயந்து சாட்சி அளித்தேன், இது அனைத்துக்கும் காவல்துறைக்கும் பயந்துதான் சாட்சி அளித்தேன் என சுவாதி தெரிவித்தார். இதன்பின், நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?, சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள்.
எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? என சுவாதிக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர். குழந்தைகள் மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது என சொன்னால், இந்த நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?, உண்மையைக் கூறுவதால், ஏதேனும் பிரச்சனை எழுமெனில் அவற்றையாது சொல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது, உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்தது, உண்மை என்றைக்கானாலும் சுடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன் என சுவாதி கூறியுள்ளார்.
இந்த நிலையில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் புதன்கிழமை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடைசி வாய்ப்பாக வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம், அன்றைய தினம் சுவாதி ஆஜராக வேண்டும். புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.