#BREAKING : கோகுல் ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை உறுதி..! – சென்னை உயர்நீதிமன்றம்

Chennai High Court

கோகுல் ராஜ் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி, யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ், அமுதரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 15 பேர் மீது வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. இவ்வழக்கு முதலில் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது, இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அதாவது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 17 பேரில் 2 பேர் இறந்த நிலையில், மீதமுள்ளவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும் 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதன்படி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அவரது அவரது கார் ஓட்டுநரான அருண் ஆகியோருக்கு சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், எஞ்சிய 8 பேரில் குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரவி, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இதனிடையே, 5 பேரின் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜின் தாயாரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீடு வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு மீது தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வாசித்தனர். அதில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என கூறி, தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுபோன்று, கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜ் தாயார் தொடர்ந்த மேல்முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்