கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் – பாமக தலைவர்

Default Image

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அவசர சட்டம் முன் வரவை சட்டப்பேரவையில் இயற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாமதப்படுத்தி வருகிறார் என குற்றசாட்டு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் இறந்துள்ளார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானி ஓட்டுனரின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை ஆகும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தடுக்க முடியாததாகி விடும். வாழ்க்கையில் முன்னேறும் நோக்கத்துடன் மகளிர் குழுவில் மனைவி கடனாக பெற்று வந்த ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி பார்த்திபன் இழந்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தை அழிக்கிறது. அதைத் தடுக்க சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றே ஒப்புதல் அளிக்கவேண்டும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்