ஒரு “மாய லாலிபாப்-ஐ” கொடுத்து ஏமாற்றி உள்ளது, அது உண்மை அல்ல – முக ஸ்டாலின்
மத்திய பட்ஜெட் தாக்கல் ஒரு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்யவில்லை. தாகத்தால் தவிக்கும் பசுவுக்கு கானல்நீர் காட்டுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய பாஜக அரசு ’மாய லாலிபாப்’ கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளில் தெளிவு என்பது ஏமாற்றம். தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் 3500 கிமீ சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விடவில்லை. இப்படியொரு திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது என்று மட்டுமே நிதி நிலை அறிக்கையின் 10-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனவால் இழந்த வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை.
நதி நீர் இணைப்பு, நிவர், புரெவி, கனமழை பாதிப்புக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட லட்சக் கணக்கான மக்களுக்கு, குறிப்பாகத் தமிழக விவசாயப் பெருமக்களுக்கு, மிகவும் ஏமாற்றத்தை தருகிறது. விவசாயிகள், வேலைவாய்பின்றி தவிக்கும் இளைஞர்கள், ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லாத பட்ஜெட் இது. சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் கொடுத்திருக்கிறதே தவிர, அந்த லாலிபாப் உண்மையானது அல்ல என்பதை நிதி நிலை அறிக்கையின் வாசகங்கள் நிரூபிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டுக்கு ஆக்கபூர்வ நிதி ஒதுக்கீடு செய்யாமல் – ’தாகத்தால் தவிக்கும் பசுவுக்கு கானல்நீர் காட்டுவது போல’ சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக அரசு ’மாய லாலிபாப்’ கொடுத்து – தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் விமர்சனம்.
Link: https://t.co/KAlswt7gEr pic.twitter.com/xYG31bl0yp
— DMK (@arivalayam) February 1, 2021