“பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்;வாழ்ந்து காட்டுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை:பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்,வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவே அத்துமீறியவர்களுக்கு தண்டனை பெற்று தர முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“சமீப காலமாக நாம் அதிகம் கேள்வி படும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்திகளும் அவமானமாக உள்ளது,இவை என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது.கல்வி,வேலை வாய்ப்பில் முன்னேறிய ஒரு நாட்டில்,அறிவியல் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த காலக்கட்டத்திலும் இப்படிப்பட்ட கேவலமான அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்யும் என்பது வெட்கி தலை குனிய வைக்கிறது.
இதைப்பற்றி பேசாம இருக்க முடியாது,இருக்கவும் கூடாது.விட்டுவிடாதீர்கள் என்று அந்த குழந்தைகள் கதறுவது எனது மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இவ்வாறு,பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாக புகார் தருவதற்கு முன்வர வேண்டும்,புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு யாரும் தயங்கக் கூடாது.
புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்றோ, தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரோ நினைக்கக் கூடாது. அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.
சில நாட்களுக்கு முன்னர் தலைமைச்செயலகத்தில் குழந்தைகளுக்கான கொள்கை -2021 என்ற கொள்கை குறிப்பேட்டை நான் வெளியிட்டேன்.குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு கட்டும் அதே அக்கறையை பள்ளிகள்,கல்லூரிகள் நிர்வாகமும் காட்ட வேண்டும்.தங்களிடம் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை அவை உறுதி செய்ய வேண்டும்.ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டால் இந்த சமூகம் அனைத்தையும் மொத்தமாக குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார்.எனவே,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்,வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவே அத்துமீறியவர்களுக்கு தண்டனை பெற்று தர முடியும் .
அதன்படி,பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர அரசு தயங்காது.எனவே,உங்கள் தந்தையாக,சகோதரனாக,உங்கள் குடும்பத்தில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.நான் இருக்கேன்,அரசாங்கம் உள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.