“பசியை ஒழியுங்கள்,உண்மையை ஒழிக்காதீர்கள்” – எம்பி சு.வெங்கடேசன் காட்டம்!

Default Image

மதுரை:குடியரசுத்தலைவர் தனது உரையில் அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி பேசுகிறார்.ஆனால்,கடந்த 75 ஆண்டுகளாக போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிட்டு யாருக்காக போடப்படுகிறது புதிய அடித்தளம்? என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில்,அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி குடியரசுத்தலைவர் உரை பேசுகிறது.ஆனால், 75 ஆண்டுகளாக ஏற்கனவே போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதுதான் இதன் பொருளா என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“குடியரசுத்தலைவர் உரை,கோவிட் தடுப்பூசி பற்றி பெருமையாக பேசுகிறது. ஆனால்,25 % தனியாருக்கு தந்து 4% கூட அவர்கள் போடவில்லை என்ற தங்களின் கொள்கை தோல்வியை ஒரு வரியாவது சொல்லி இருக்கலாமே.

அம்பேத்கர் காண விரும்பிய சமூகம் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற மேற்கோள் அருமைதான்.ஆனால் காலனி ஆதிக்கத்தின் கால் சங்கிலியான “தேசத் துரோக ” சட்டம் இன்றும் மாற்றுக் குரல் கொடுப்போரின் மீது பாய்கிறதே. “பத்ம” விருதுகள் எப்படி அறிவித்து இருக்கிறோம் என்று சமத்துவம் நோக்கிய நகர்வாக சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.விருதுகள் அல்ல நகர்வுகள்.உயர் கல்வி நிறுவனங்களில் இன்று வரை ஒடுக்கப்பட்டவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க மறுக்கிறீர்களே,அதைக் கொடுங்கள்.சகோதரத்துவம் பற்றி உங்கள் உபி முதல்வர் யோகிக்கு கற்றுக் கொடுங்கள்.

பசி மரணங்களை 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒழித்து விட்டோம் என்கிறீர்களா!ஒழித்த இந்தியாவா உலகப் பசி குறியீட்டில் 116 நாடுகளில் 102 வது இடத்தில் உள்ளது? உலகின் வளர்ச்சி குன்றிய, எடை குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒன்றை இங்கே வைத்திருக்கிறது.பசியை ஒழியுங்கள்,உண்மையை ஒழிக்காதீர்கள்.

விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் பற்றிய பத்திகள் 22 முதல் 29 வரை எட்டுப் பத்தி என்ற அளவில் பெரிதாக உள்ளது.ஆனால் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதே சோகம்.மேலும்,எம்.எஸ்.சுவாமிநாதன் தொடர்ந்து வலியுறுத்தும் C2 + 50% குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றி ஒரு வரி கூட இல்லை.பிரதமர் கேட்ட மன்னிப்பு, அதற்கு பின்னர் என்ன நேர்மறை நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.

பெண்களுக்கு உஜ்வாலா கேஸ் சிலிண்டர் திட்டம் வெற்றி என்று ஒரு வரியில் அறிக்கை கடந்து செல்கிறது. அடுப்பை கொடுத்து விட்டு ஆகாயத்திற்கு கேஸ் விலையை கொண்டு போய் விட்டதைப் பற்றி இன்னொரு வரி எழுதி இருக்கலாம். ஒரு மாநிலத்தில் 99% உஜ்வாலா சிலிண்டர்களுக்கு மக்களால் கேஸ் நிரப்ப முடியவில்லை என்பதை மனதிற்குள் சொல்லிக் கொண்டீர்களோ என்னவோ.

5 ஜி தொழில் நுட்பம் நோக்கி இந்தியா நகர்ந்து விட்டது என்று பெருமை வேறு. உங்கள் கைகளில் உள்ள பி.எஸ்.என்.எல் 4 ஜி க்கு அனுமதி தாருங்கள் என்று எத்தனை ஆண்டுகளாக மன்றாடுகிறது.யாருக்காக இந்த தாமதம்.பிரதமர் படத்தை விளம்பரத்தில் போட்டவர்களுக்காகவா?.

சிறு தொழில் மீட்சி பற்றி பேசி இருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பிய வட்டி மானியத் தொகை எங்களுக்கு வராததால் முழு வட்டியைக் கொடுங்க என்று வங்கிகள் குறு சிறு நடுத்தர தொழில்களை நெருக்குவது தெரியாதா?

ரயில்வே விரிவாக்கம் பற்றி பேசி இருக்கிறீர்கள்! எல்லாம் தனியார்மயம், பணமாக்கல் பற்றி பேசுகிற நேரத்தில் உங்களின் செலவுகள் பற்றி சந்தேகம் வருகிறதே. இவ்வளவு செலவுக் கணக்கு காண்பிக்கும் நீங்கள் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தை பறித்து இன்னும் திருப்பித் தராமல் அல்லாட விடுகிறீர்களே. எப்போது தருவீர்கள் என்று சொல்லி இருக்கலாம்.

விமான தள மேம்பாடு பற்றி அறிக்கை பேசுகிறது. சில ஊர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு கூட சிலாகிக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதில் மட்டும் என்ன உங்களுக்கு மனத் தடை.தமிழகம் என்றால் புறக்கணிப்பு என்று தான் பொருளா?.

இப்படி நிறைய கேள்விகள் மாண்பமை குடியரசுத் தலைவர் அவர்களே, வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி சுருங்குகிற வரை உண்மைக்கும் உங்கள் அரசிற்குமான இடைவெளி நீடிக்கத்தான் செய்யும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk