ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம். புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 4 அன்று தொடங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள்
இந்த வருடம் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.அவனியாபுரத்தில் வரும் 14-ந்தேதி , 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் நாளை முதல் ஆன்லைனில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
விளையாட விண்ணப்பம் செய்வது எப்படி?
- மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Jallikattu – Bull / Tamer Registration – ஜல்லிக்கட்டு காளை / காளையை அடக்குபவர் பதிவு என்ற பிரிவை க்ளிக் செய்யவேண்டும்.
- பின், Jallikattu – Tamer Registration – ஜல்லிக்கட்டு காளையை அடக்குபவர் பதிவு க்ளிக் செய்யவேண்டும்.
- அதனை க்ளிக் செய்த உடன் விண்ணப்பம் வரும் அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் உங்களிடம் இருக்கும் தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம், இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள், பதிவு செய்து, அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடைசி நாள்
ஜல்லிக்கட்டிடு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் இன்று மாலை 5 மணிமுதல் நாளை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்த நாட்களில் விண்ணப்பம் செய்யமுடியாது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் நாளை (ஜனவரி 7) மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ளமுடியும்.